search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தற்போதைய பா.ஜ.க. எம்.பி.க்களில் 100 பேருக்கு மீண்டும் சீட் கிடையாது: பிரதமர் மோடி அதிரடி திட்டம்
    X

    தற்போதைய பா.ஜ.க. எம்.பி.க்களில் 100 பேருக்கு மீண்டும் "சீட்" கிடையாது: பிரதமர் மோடி அதிரடி திட்டம்

    • பாரதிய ஜனதா கட்சி 50 சதவீத வாக்குகளை பெற்றால் 350 முதல் 400 எம்.பி. தொகுதிகள் வரை வெற்றி கனியை பறிக்க முடியும்.
    • பிரதமர் மோடியை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை சந்திக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடியும் அவரது சகாக்களும் எதை செய்தாலும் அதில் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கும் அல்லது புதிய வியூகம் ஒன்றுக்கு அவர்கள் அச்சாரம் போடுவார்கள் என்பது கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு நிகழ்விலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்து அலசி ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெரியும். அந்த வகையில் பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருச்சியில் இன்று நடக்கும் விழாவில் பிரதமர் மோடி புதிய விமான நிலையத்தையும், புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவிலும் கலந்து கொள்வதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இதற்காக மட்டுமே வரவில்லை. புதிய வியூகங்களுக்கு இன்று அவர் அடித்தளம் போட இருக்கிறார்.

    2014, 2019-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைத்த பிரதமர் மோடி தற்போது (2024-ம் ஆண்டு) எதிர்கொள்ள இருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதாவை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது 31 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. நாடு முழுவதும் 37 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. இந்த வாக்கு சதவீதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் இலக்காக உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி 50 சதவீத வாக்குகளை பெற்றால் 350 முதல் 400 எம்.பி. தொகுதிகள் வரை வெற்றி கனியை பறிக்க முடியும். இந்த இலக்கை அடைய பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் கடந்த ஆண்டே பணிகளை தொடங்கி விட்டனர்.

    மோடியை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 27 கட்சிகள் ஓர் அணியில் உள்ளன. அந்த கட்சிகள் இடையே 4 தடவை ஆலோசனை கூட்டம் நடந்தும் இன்னமும் தொகுதி பங்கீட்டுக்கு செல்ல முடியவில்லை. இந்தியா என்ற கூட்டணி பெயரை முடிவு செய்ததோடு அப்படியே தொடங்கிய இடத்தில்தான் நிற்கிறார்கள்.

    அவர்களுடன் ஒப்பிடுகையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஓசையில்லாமல் அடுத்தடுத்த வேலைகளை செய்து வருகிறார்கள். நாடு முழுவதும் மாநில கட்சிகளுடன் பாரதிய ஜனதாவின் தொகுதி பங்கீடு வெளிப்படையாக நடக்காமல் 90 சதவீதம் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அடுத்த கட்டமாக வேட்பாளர் தேர்வில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. எம்.பி.க்கள் செய்த பணிகள் என்னென்ன என்பதை தமது நமோ செயலி மூலம் தகவல்களை பெற்று வருகிறார்.

    மேலும் உளவுத்துறை மூலமாகவும் பாரதிய ஜனதா எம்.பி.க்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள எம்.பி.க்களுக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக ஒவ்வொரு எம்.பி.யின் வெற்றி சாதனை, மக்கள் நலப்பணி, தொகுதி மக்களுடன் உள்ள உறவு, முக்கிய நேரங்களில் கட்சிக்கு ஆற்றிய பணி ஆகியவை அலசி ஆராயப்படுகிறது. இது தவிர இதுவரை பாரதிய ஜனதா சார்பில் அதிக தடவை எம்.பி.யாக இருக்கும் வயதானவர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தவும் மோடியும், அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த அடிப்படையில் பார்த்தால் தற்போதைய பா.ஜ.க. எம்.பி.க்களில் 3-ல் ஒருவருக்கு டிக்கெட் கொடுக்காமல் கல்தா கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது தற்போதைய பாரதிய ஜனதா எம்.பி.க்களில் குறைந்தபட்சம் 100 பேருக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காது என்பது உறுதியாகி இருக்கிறது.

    கட்சியின் உள்மட்டத்தில் நடந்த சர்வேக்கள் மூலமாகவும் இந்த முடிவை பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. மிக உறுதியாக வெற்றி பெறுபவர் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    பிரதமர் மோடியை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை சந்திக்கவில்லை. அவரது ஆட்சி மீதும் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிருப்தி இல்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இது வலுவாக உணர்த்தப்பட்டது. அந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருந்த 31 சதவீத வாக்குகளில் 90 சதவீதம் அடிமட்ட மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகள் ஆகும். பிரதமர் மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள்தான் இதற்கு அடிப்படையாக இருந்தது.

    இதை கருத்தில் கொண்டுதான் கடந்த 5 ஆண்டுகளில் கிராம மக்கள் அதிகளவு பயன்பெறும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்தார். மேலும் ஒரு சதவீதம் கூட எதிர்ப்பு அலைகள் இல்லாமல் பார்த்து கொண்டார். இது தவிர ஜி-20 மாநாட்டை நடத்தியதின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை ஓங்கி ஒலிக்க செய்துள்ளார்.

    சந்திரயான் விண்கலத்தை நிலவின் தெற்கு பகுதியில் தரையிறக்கி சாதனை படைத்ததன் மூலம் உள்நாட்டு மக்களிடமும் ஆதரவை அதிகரிக்க செய்துள்ளார். எனவேதான் 50 சதவீத வாக்குகளை எட்டி பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காகவே அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கவனம் செலுத்தி காய்களை நகர்த்தி வருகிறார்.

    குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த தடவை அதிக வெற்றியை பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகவும் தீவிரமாக உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

    தென் மாநிலங்களில் மொத்தம் 130 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வெறும் 29 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதிலும் 25 தொகுதிகள் கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே கிடைத்து இருந்தன. இதர 4 தொகுதிகள் தெலுங்கானாவில் இருந்து கிடைத்து இருந்தது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய 4 மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த தடவை இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து களம் இறங்கி உள்ளனர்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்து இருப்பதால் இந்த தடவை கடந்த 2019-ம் ஆண்டு போல அபரிமிதமான எம்.பி.க்கள் தொகுதிகளை கைப்பற்ற முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதை மற்ற தென் மாநிலங்களில் ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தமும் பா.ஜ.க. மேலிட தலைவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    இதை கருத்தில் கொண்டே தென் மாநில மக்களை கவரும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

    கர்நாடகாவில் மீண்டும் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் பாரதிய ஜனதா கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதுபோல ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூட்டணி உறுதியாகி உள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு சிறிய கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் இன்றைய திருச்சி வருகை அமைந்தது.

    உத்தரபிரதேசம், பீகார் தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் பாரதிய ஜனதா தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது கூட பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    உதாரணத்திற்கு தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 8 முதல் 10 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

    இதற்காக ஆங்காங்கே தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டு விட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அதில் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் 300 கட்டுப்பாட்டு அறைகள் அப்படி செயல்பட்டு வருகின்றன.

    அவர்கள் 80 கோடி பேரை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் ரகசிய அதிரடி திட்டங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வரத்தொடங்கி விட்டன.

    Next Story
    ×