என் மலர்tooltip icon

    இந்தியா

    பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர்- துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு
    X

    பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர்- துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு

    • 3 பேருமே லஷ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
    • டிரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தாக்குதலின்போது ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பியவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டனர்.

    மேலும் தாக்குதல் நடைபெற்ற பைசரன் புல்வெளி பகுதியில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பதிவாகி இருந்த காட்சிகளை சேகரித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    இதில் முக்கிய திருப்பமாக பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 முக்கிய தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஹாஷிம்மூசா என்ற சுலைமான், அலிபாய் என்ற தல்காபாய், அபித் ஹூசைன் தோக்கர் என்பது தெரியவந்துள்ளது.

    இதில் ஹாஷிம்மூசா, அலிபாய் ஆகிய இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். அபித் ஹூசைன் தோக்கர் காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் 3 பேருமே லஷ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று உறுதிபடுத்தி உள்ள பாதுகாப்பு துறை அதிகாரிகள், 3 பேரும் கிஷ்த்வாரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

    மேலும் தாக்குதலுக்கு பிறகு இந்த கும்பல் பிர்பஞ்சல் மலை தொடரின் உயரமான பகுதிகள் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அந்த பகுதிகளில்

    மேலும் தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டர் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    மேலும் இந்த 3 தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பஹல்காம் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது அவர் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கும், ராணா நாடு கடத்தப்பட்ட சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராணா விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ. தலைமை இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×