search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு
    X

    கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு

    • எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது.
    • தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது.

    புதுடெல்லி :

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொடுமையை தாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று கூடுதலாக உத்தரவுகளை பிறப்பித்தது.

    அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:-

    கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது. கடன் தவணையை செலுத்துமாறு, இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    Next Story
    ×