search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மெக்டொனால்டையும் விடவில்லை தக்காளி விலையேற்றம்: உணவுகளில் தக்காளி நீக்கம்
    X

    மெக்டொனால்டையும் விடவில்லை தக்காளி விலையேற்றம்: உணவுகளில் தக்காளி நீக்கம்

    • பருவகால சிக்கல்களினால் தக்காளியை வாங்க முடியவில்லை என மெக்டொனால்டு நிறுவனம் கூறியிருக்கிறது.
    • தக்காளி விலை உயர்வை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    அமெரிக்காவை தளமாக கொண்ட உலகப்புகழ் பெற்ற 'மெக்டொனால்டு' நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவகங்களின் சில கிளைகளில் தயாரிக்கப்படும் அனைத்து ரெசிபிக்களிலும் குறுகிய காலத்திற்கு தக்காளி பயன்படுத்தப்படாது என அறிவித்திருக்கிறது.

    மெக்டொனால்டின் இந்தியா-வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தக்காளி கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் பருவகால சிக்கல்கள் காரணமாக, மெக்டொனால்டின் தயாரிப்புகளில் தக்காளி பயன்படுத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "உணவின் தரம் மற்றும் பாதுகாப்பில் நம்பகமான ஒரு பிராண்டாக நாங்கள் இருந்து வருகிறோம். கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், பருவகால சிக்கல்களினால் தக்காளியை எங்களால் வாங்க முடியவில்லை. எனவே, எங்களின் சில உணவகங்களில் எங்கள் மெனுவில் தக்காளியை பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்துகிறோம். இது ஒரு தற்காலிக பிரச்சினை. விரைவில் தக்காளியை மீண்டும் எங்கள் மெனுவில் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்கிறோம்" என கூறியிருக்கிறது.

    ரெசிபிகளில் தக்காளியை நீக்கியதற்கு விலையேற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் தக்காளியை தவிர்ப்பதற்கு, தக்காளியின் விலை உயர்வை காரணமாக மெக்டொனால்ட் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் தக்காளியின் விலை கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை டெல்லி, கொல்கத்தா, மற்றூம் உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் கிலோ ரூ.130-150 எனும் அளவை எட்டியுள்ளது.

    தக்காளி விலை உயர்வை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி அரசு கிலோவுக்கு ரூ.115 என கிடைக்க வழி செய்திருக்கிறது. தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்கப்படுகிறது.

    மெக்டொனால்டு உணவகம் தக்காளியை தனது தயாரிப்புகளில் இருந்து நீக்குவது இது முதல் முறை அல்ல. 2016 ஆம் ஆண்டில், வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மெக்டொனால்டு கிளைகள், தக்காளியின் தரம் குறைந்ததால் 'பர்கர்' தயாரிப்புகளில் அதனை பயன்படுத்துவதை சில நாட்கள் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×