search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம் புறப்படலாம்- ரூ.50 ஆயிரம் வரை செலவை குறைக்க நடவடிக்கை
    X

    சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம் புறப்படலாம்- ரூ.50 ஆயிரம் வரை செலவை குறைக்க நடவடிக்கை

    • ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம்.

    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதாகும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படுவது நீக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80 சதவீதம் ஹஜ் கமிட்டிகளுக்கும் 20 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். ஏற்கனவே ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற் கொண்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது.

    ஹஜ் பயணத்துக்கான ரூ.300 மதிப்பிலான விண்ணப்பம் நடப்பாண்டு இலவசமாக வழங்கப்படும். இதை ஹஜ் கமிட்டி இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களிடம் மட்டும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

    பயணிகளின் திட்ட செலவு மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மஹ்றம்) செல்பவர் இல்லையென்றாலும் அவர்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தனியாக தங்கும் இடம் அளிக்கப்படும்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம். பயணிகள் உடல் நலம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

    அந்த பரிசோதனை மத்திய அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும்.

    ஹஜ் பயணிகளுக்கு அருகே உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும்.

    சென்னை, கண்ணூர், கொச்சி, விஜயவாடா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, அகர்தலா, கோழிகோடு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், ஜெய்ப்பூர், வாரணாசி, அவுரங்காபாத், கோவா, மங்களூர், போபால், இந்தூர், கவுகாத்தி, கயா, ராஞ்சி, ஸ்ரீநகர் ஆகிய 25 விமான நிலையங்களில் இருந்து பயணிகள் புறப்படலாம்.

    அனைத்து மாநிலங்களிலும் இருந்து இயக்குனர் அளவிலான அதிகாரி ஹஜ் பயணிகளின் உதவிக்காக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×