நேரு இந்தியாவை 2 முறை பிரித்தார்.. கொந்தளித்த பிரதமர் மோடி - பதிலளித்த பிரியங்கா காந்தி!

பேச்சு சுதந்திர உரிமையை நசுக்க நேருவின் ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது.இந்த ஒப்பந்தம் எந்த நன்மையையும் தரவில்லை என்று நேருவே தனது செயலாளரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
நேரு இந்தியாவை 2 முறை பிரித்தார்.. கொந்தளித்த பிரதமர் மோடி - பதிலளித்த பிரியங்கா காந்தி!
Published on

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மீது இந்நாள் பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய மோடி, "நேரு நாட்டை ஒரு முறை அல்ல, இரண்டு முறை பிரித்தார். முதலில் ராட்க்ளிஃப் கோடு மற்றும் பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம், அவர் நாட்டிற்கு சேதம் விளைவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிந்து நதியின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் எந்த நன்மையையும் தரவில்லை என்று நேருவே தனது செயலாளரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது.

அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையை நசுக்க நேருவின் ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது.

காங்கிரஸ் அரசு பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சிக்கு ஒருபோதும் பாடுபடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளை நாடு எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நேருவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த காலத்தை தோண்டி எடுப்பதை நிறுத்திவிட்டு, நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்கு பொறுப்பு வேண்டும்" என்று தெரிவித்தார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com