search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் விவகாரம் - முட்டை கூட எடுக்க முடியல.. இதைத் தான் இவ்வளவு நாளா ஒட்டிட்டு இருந்தீங்களா?
    X

    நீட் விவகாரம் - 'முட்டை' கூட எடுக்க முடியல.. இதைத் தான் இவ்வளவு நாளா ஒட்டிட்டு இருந்தீங்களா?

    • ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி.
    • பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம்.

    இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நாடு முழுக்க அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. எனினும், சர்ச்சைகளோடு, சேர்த்து நீட் தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

    நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்களில் பலர் சமீப காலங்களில் அதிகளவில் தேர்ச்சி பெற துவங்கி உள்ளனர். தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகளும் முற்றுபெறாமல், தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது.

    இது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பங்கேற்போர் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றாலும் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுக்க அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    2016ஆம் ஆண்டு 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்ததால் இந்த விதியால் பிரச்சனையும் எழவில்லை.

    ஆனால், இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள். எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது.

    எனவே இவர்களுக்காக, பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான சேர்ந்தவர்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள். ஆனால், 2023-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் கூட எடுக்காமல் நெகடிவ் மதிப்பெண் எடுத்திருப்பவர்கள் 2017-க்கு பிறகு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள்.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை எடுத்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்பின் மூலம், நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயின்றவர்களால், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மேலும், நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்களால் பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியாத நிலை இருப்பதால் தான், இந்த சட்ட திருத்தம் இயற்றப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×