search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    378 எம்.பி.க்களுக்கு நட்டா அதிரடி உத்தரவு: மக்கள் கருத்துக்களை அறிந்து தெரிவியுங்கள்
    X

    378 எம்.பி.க்களுக்கு நட்டா அதிரடி உத்தரவு: 'மக்கள் கருத்துக்களை அறிந்து தெரிவியுங்கள்'

    • அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் நட்டா உரையாற்றினார்.
    • தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு எம்.பி.யும் வாக்காளர்களை தேடி செல்ல வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி இருக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தூக்கம் பார்க்காமல் இரவு-பகலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேர ஆலோசனையில் பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு உள்பட முக்கிய முடிவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நேற்று நட்டா அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர் ஆலோசனை மேற்கொண்டார். பாரதிய ஜனதா கட்சியில் பாராளுமன்ற இரு அவைகளிலும் மொத்தம் 378 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

    அவர்கள் அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் நட்டா உரையாற்றினார். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அது மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியின் 378 எம்.பி.க்களும் அமைப்பு ரீதியி லான தேர்தல் பணிகளில் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 378 எம்.பி.க்களின் சமூக வலைதளங்களை கையாள்பவர்களையும் நட்டா இந்த கூட்டத்தில் அழைத்து பேசினார்.

    நமோ ஆப் மூலம் முக்கிய தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும் அவற்றை மக்களிடம் தவறாமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நட்டா அறிவுரை வழங்கினார்.

    தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு எம்.பி.யும் வாக்காளர்களை தேடி செல்ல வேண்டும் என்றும் நட்டா கேட்டுக் கொண்டார். அவர் நேற்று 3 கட்டங்களாக பா.ஜ.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    முதல் கட்டத்தில் 126 எம்.பி.க்களுடனும் 2-வது கட்டத்தில் 132 எம்.பி.க்களுடனும் ஆலோசித்தார். மீண்டும் அடுத்த வாரமும் இத்தகைய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×