search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை கைது செய்யலாம்: வெங்கையா நாயுடு
    X

    குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை கைது செய்யலாம்: வெங்கையா நாயுடு

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
    • குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    புதுடெல்லி :

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை மாநிலங்களவையில் எழுப்பிய அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது சம்மன் அனுப்புவது அழகா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளும் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.

    இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதாக உறுப்பினர்களிடையே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதாவது பாராளுமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு குற்ற வழக்கில் கைதாவதில் இருந்து ஒரு எம்.பி.க்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

    அந்தவகையில் பாராளுமன்ற தொடரின்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை விசாரணை அமைப்புகளால் கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ முடியும்.

    மேலும் குற்ற வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்தும் உறுப்பினர்களுக்கு விலக்களித்து சிறப்புரிமை அளிக்கப்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    அதேநேரம் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது சிவில் வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    Next Story
    ×