என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்
    X

    கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்

    • குடகு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக மழை நின்றதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×