என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

    ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.

    இதுபற்றி கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் டெல்லியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

    இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 8.05 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    முன்னதாக டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Live Updates

    • 27 Dec 2024 7:43 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். 

    • 27 Dec 2024 7:41 AM IST

      மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு- ராமதாஸ்

      பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

      இந்தியாவின் தலைசிறந்த பிரதமர்களில் ஒருவரும், உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

      இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மன்மோகன் சிங் அவர்களுக்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு. 1990களின் தொடக்கத்தில் இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்த நேரத்தில், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு அவர்தான் முதன்மைக் காரணம் ஆவார். 2004ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற போதும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் மன்மோகன் சிங் அவர்கள். உலக நாடுகளின் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் அவர். இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியை அடைந்த போதிலும் கூட, தனது எளிமையை விட்டுக்கொடுக்காத சிறந்த மனிதர்.

      தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரதமராக இருந்த போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பா.ம.க. முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர். மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முடியாத சூழல் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட போது, அதை ஏற்றுக்கொள்ள நான் மறுத்தேன். எனினும் என்னை சமாதானப்படுத்த அவர் முயன்றார். ஆனால் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அறிந்து கொண்ட அவர், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டார்.

      மன்மோகன் சிங் அவர்களின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • 27 Dec 2024 7:38 AM IST

      நிறைய சாதித்த நிறைகுடம் மன்மோகன் சிங்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்


      துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

      முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார் என்கிற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது.

      இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை மன்மோகன் சிங் அவர்களின் காலகட்டத்திற்கு முன் - பின் என்று குறிப்பிடும் அளவுக்கு மாற்றியமைத்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்துக்கும், மதிப்புக்கும் உரியவர்.

      நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மூலம் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர். 10 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் இருந்து நிறைய சாதித்த நிறைகுடம் திரு.மன்மோகன்சிங் அவர்கள்.

      அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பெற்றத் திட்டங்களும் - அடைந்த வளர்ச்சியும் அதிகம்.

      உலகப் பொருளாதாரத்தின் திசைவழியை சரியாகப் புரிந்துகொண்டு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்த மன்மோகன் சிங் அவர்களின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும்.

      அவர்களின் மரணத்துக்கு எனது ஆழந்த இரங்கல்.

      அவரை இழந்து வாடும் காங்கிரஸ் பேரியக்கத்தினர் - குடும்பத்தினர் - நண்பர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். 

    • 27 Dec 2024 7:35 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: அண்ணா பல்கலை. விவகாரத்தைக் கண்டித்து அதிமுக இன்று அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

    • 27 Dec 2024 7:35 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழா உட்பட கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து.

    • 27 Dec 2024 7:35 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இன்று நடைபெற இருந்த மத்திய அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து. 

    Next Story
    ×