என் மலர்
இந்தியா

முடி வளர வைப்பதாக கூறி மொட்டை தலையில் எண்ணெய் தடவி 6 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்
- ஆண்கள், பெண்கள் என தனி, தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
- சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பழைய நகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.
அதில் குலி குதுப் ஷாஹி மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தலையில் மொட்டை அடித்துக் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.
டெல்லியை சேர்ந்த சல்மான் டெல்லி வாலா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் காலை குலி குதுப் ஷாஹி மைதானத்திற்கு வந்தனர். விளம்பரத்தைக் கண்ட ஆண்கள், பெண்கள் என 6 ஆயிரம் பேர் மைதானத்தில் குவிந்தனர்.
ஆண்கள், பெண்கள் என தனி, தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் பதிவு கட்டணமாக ரூ.700 எண்ணெய் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்பட்டது.
சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர்.
இந்த எண்ணெயை 15 நாட்களுக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு தடவி வந்தால் அடர்த்தியான முடி வளரும் என உத்தரவாதம் அளித்தனர். இதனை நம்பி பணத்தை கட்டிய பொதுமக்கள் தலையில் எண்ணெய் தடவி விட்டு சென்றனர்.
சிகிச்சை அளித்து முடிந்ததும் சல்மான் குழுவினர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று விட்டனர்.
ஏற்கனவே இந்த குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உப்பலில் இதே போல் விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துக் கொண்டு ஏமாற்றி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து உப்பல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர்.
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






