என் மலர்
இந்தியா

மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்- மம்தா பானர்ஜி அறிவிப்பு
- சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன்.
- வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும்.
கொல்கத்தா:
வக்பு திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதை தொடர்ந்து இது சட்டமானது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள் மேற்கு வங்காளத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.






