என் மலர்tooltip icon

    இந்தியா

    மாலேகான் குண்டுவெடிப்பு: மோடியின் பெயரை கூற சொல்லி சித்ரவதை செய்தனர் - பிரக்யா சிங்
    X

    மாலேகான் குண்டுவெடிப்பு: மோடியின் பெயரை கூற சொல்லி சித்ரவதை செய்தனர் - பிரக்யா சிங்

    • 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினார்.
    • காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி.

    2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    காவலில் சித்திரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் பெயர்களை வெளியிடுமாறு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மும்பையில் முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், அப்போதைய விசாரணை அதிகாரிகளின் நடத்தையை கடுமையாக விமர்சித்தார்.

    "உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர்கள் ராம் மாதவ் மற்றும் இந்திரேஷ் குமார் போன்றவர்களின் பெயர்களை வெளியிட அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினர்.

    நான் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தினால், சித்திரவதை நின்றுவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் பொய் சொல்ல மறுத்துவிட்டேன்" என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.

    இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆதாரமற்றது என்றும், 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இந்த அட்டூழியங்களுக்கு முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், "காவல்துறையினர் செலுத்திய சித்திரவதையால் என் நுரையீரல் கிழிந்துவிட்டது. அவர்கள் செய்த அட்டூழியங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று அவர் கூறினார்.

    தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதை 'காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி' என்று பிரக்யா தாக்கூர் விவரித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×