search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த ஆப்கானிஸ்தான் மாணவி- தலிபான்களுக்கு வேண்டுகோள்
    X

    குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த ஆப்கானிஸ்தான் மாணவி- தலிபான்களுக்கு வேண்டுகோள்

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×