என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிர்ஷ்ட காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குஜராத் தொழிலதிபர்
    X

    அதிர்ஷ்ட காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குஜராத் தொழிலதிபர்

    • சஞ்சய் போல்ராவின் இந்த வினோதமாக ஏற்பாடு கிராம மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
    • பல்வேறு முன்னேற்றங்களை தந்ததாக கருதிய சஞ்சய் போல்ரா தனது காரை குடும்பத்தில் ஒருவரைப் போல பாவித்தார்.

    குஜராத்:

    மனித வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்து வெளி உலகத்திற்கு தங்களை பிரபல படுத்திக் கொள்ள நினைக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

    வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை, கிளி மற்றும் கால்நடைகள் இறந்து விட்டால் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தி சிறப்பு பூஜைகளுடன் அடக்கம் செய்வது பல அபிமானிகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதைவிட ஒரு படி மேலே போய் விட்டார் இந்த தொழிலதிபர்.

    குஜராத் மாநிலம் லத்தி தாலுகா பதர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் போல்ரா, பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தனது குடும்ப பயன்பாட்டிற்காக சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அந்த கார் ஷோரூமில் இருந்து தனது வீட்டுக்கு வந்ததில் இருந்து தனது வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை தந்ததாக கருதிய சஞ்சய் போல்ரா தனது காரை குடும்பத்தில் ஒருவரைப் போல பாவித்தார்.

    அதிஷ்ட கார் தனக்கு அபரிமிதமான செழிப்பை கொண்டு வந்ததாகவும், தனது சமூக நிலையை உயர்த்தியதாகவும் நினைத்த சஞ்சய் போல்ரா 18 ஆண்டுகள் தன்னையும், குடும்பத்தினரையும் பத்திரமாக சுமந்த இந்த காரை யாருக்கும் கொடுத்து விடாமல் அடக்கம் செய்து சமாதி கட்ட தீர்மானித்தார்.

    இதற்காக இரண்டாயிரம் அழைப்பிதழ்களை அச்சடித்தார். அழைப்பிதழை கிராம மக்கள் ஒவ்வொருருக்கும் வழங்கினார். அந்த அழைப்பிதழில் அவர் கூறியிருந்ததாவது:-

    இந்த அதிர்ஷ்ட கார் கடந்த 2006-ம்ஆண்டு முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவரை போல இருந்தது. இந்த காரால் அபரிமிதமான செழிப்பையும் அந்தஸ்தையும் பெற்றோம். எனவே தான் இந்த கார் எங்கள் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்து காருக்கு சமாதி கட்ட திட்டமிட்டுள்ளோம்.

    நவம்பர் 7-ந்தேதி நடைபெறும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து எனது அதிர்ஷ்ட காருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அழைப்பிதழை பெற்றுக் கொண்ட கிராம மக்களும் தவறாமல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு பூரி, சப்பாத்தி, சப்ஜி, லட்டு என்று பிரமாதமாக தடபுடலாக விருந்தும் பரிமாறப்பட்டது.

    அதிர்ஷ்ட கார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓதி உரிய சடங்குகள் நடத்தி இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் அதிஷ்ட காரை அடக்கம் செய்தார் சஞ்சய் போல்ரா. இதில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 7-ந்தேதி அதிர்ஷ்ட காரை அடக்கம் செய்துள்ள சமாதிக்கு சென்று தவறாமல் மலர் அஞ்சலி செலுத்துவோம். இதன் நினைவாக கார் சமாதியை சுற்றிலும் மரங்களை நட்டு பராமரிப்போம் என்றும் சஞ்சய் போல்ரா கூறினார்.

    சஞ்சய் போல்ராவின் இந்த வினோதமாக ஏற்பாடு கிராம மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அவரது சொந்த கிராமவாசியான விபுல் சோஜித்ரா கூறும்போது, கார் சமாதி விழாவுக்கு அவர் அழைத்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வருகிறோம். அவர் தனக்கு அதிஷ்டத்தையும் சமூக அந்தஸ்தையும் தந்த அந்த காருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று பிரியப்பட்டார். அவரது ஆசை கிராம மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேறி உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    எது எப்படியோ.... இருந்தாலும் இந்த வினோத ஏற்பாடுகள் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

    Next Story
    ×