என் மலர்
இந்தியா

மகாராஷ்டிரா தொழிற்சாலை தீவிபத்தில் 8 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
- மகாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை 3:45 மணிக்கு இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 3 குடும்ப உறுப்பினர் பலியாகினர். அதில் ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். மேலும் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்களும் பலியாகினர்.
தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.






