search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்
    X

    அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்

    • அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • கடந்த ஒரு மாதத்தில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை:

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×