search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வரியை திரும்பப் பெற கேரள அரசு மறுப்பு- சட்டசபையில் இருந்து காங். கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
    X

    வரியை திரும்பப் பெற கேரள அரசு மறுப்பு- சட்டசபையில் இருந்து காங். கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

    • வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் போராட்டம்
    • வரி விகிதங்களை மாற்றியமைக்காமல் மாநிலம் முன்னேற முடியாது என்று நிதியமைச்சர் கூறினார்

    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வரி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

    பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்துக்கான செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

    இன்றும் கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்கு வெளியிலும் உள்ளேயும் போராட்டம் நடத்தினர். எனினும், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் மீதான செஸ் வரியை திரும்ப பெற முடியாது என பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பதிலளித்த நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள வரி உயர்வில் எந்த மாற்றமும் இல்லை என்றார். மேலும், மாநிலத்தில் 62 லட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வது தவிர்க்க முடியாதது என்று கூறி, சமூகப் பாதுகாப்பு வரியை நியாயப்படுத்தினார்.

    இந்த வரிப்பணம் சிறப்பு நிதிக்கு செல்லும் என்றும், இது மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தேவையான மொத்த தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.

    இதேபோல் மதுபான விற்பனை மீதான செஸ் வரி விதிப்பை நியாயப்படுத்திய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வரி உயர்த்தப்படவில்லை என்றார்.

    வரி விகிதங்களை மாற்றியமைக்காமல் மாநிலம் முன்னேற முடியாது என்று கூறிய அவர், மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×