search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 200 விமான நிலையங்கள் இருக்கும்: ஜோதிர் ஆதித்ய சிந்தியா
    X

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 200 விமான நிலையங்கள் இருக்கும்: ஜோதிர் ஆதித்ய சிந்தியா

    • இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் விமான போக்குவரத்து துறை செயல்பாடுகள் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் முற்போக்கான கொள்கைகளால் உலகின் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக நாம் மாறியுள்ளோம்.

    இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் (ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட) மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அதாவது 148 ஆக உயர்ந்திருக்கிறது.

    கடந்த 2013-14-ம் ஆண்டில் இந்தியா 6 கோடி உள்நாட்டு பயணிகளை கொண்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 135 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதைப்போலவே சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் (4.7 கோடியில் இருந்து 7 கோடியாக) அதிகரித்து இருக்கிறது.

    மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, கடந்த 2014-ல் 400 ஆக இருந்த விமானங்கள் தற்போது 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

    இது வெறும் தொடக்கம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் 1,200 முதல் 1,400 புதிய விமானங்கள் வரை வாங்குவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர்களை வழங்கும்.

    இதைப்போல அடுத்த 5 ஆண்டுகளில் ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயரும்.

    அடுத்த சில ஆண்டுகளில் விமான நிலையத்துறை ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை பெறும்.

    இதைப்போல 2030-ம் ஆண்டுக்குள் நாம் ஆண்டுதோறும் 45 கோடி உள்நாட்டு பயணிகளை பார்க்கலாம். விமான நிலையங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.

    Next Story
    ×