என் மலர்
இந்தியா

ஜெகதீப் தன்கர்: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் கடந்து வந்த பாதை.. சர்ச்சையும் பின்னணியும்!
- 1951ல் ராஜஸ்தானில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
- ஒரு துணைக் குடியரசுத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை.
நேற்று பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74 வயது) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி உள்ளார்.
ராஜஸ்தானில் விவசாயக் குடும்பத்தில் 1951ல் பிறந்த ஜெகதீப் தன்கர், சட்டத்துறையில் பட்டம் பெற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
பின்னர் ஜனதா தளத்தில் இணைந்து தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கினார். 1989 முதல் 1991 வரை மக்களவை எம்.பி.யாக இருநதார். அப்போது பிரதமர் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் 2003 இல் பாஜகவில் இணைந்த தன்கர், 2019-ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மாநில சட்டம்-ஒழுங்கு, ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் மம்தா அரசுக்கு எதிராக தன்கர் விமர்சித்து வந்தார். பல முக்கிய மசோதாக்களை அவர் கிடப்பில் போட்டதாக மம்தா அரசு குற்றம்சாட்டியது.
2022 ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்த அவர் எம்.பிக்களை கூட்டாக சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளிடம் கடுமையான போக்கை கையாண்டதாக விமர்சிக்கப்பட்டார்.
2024 டிசம்பரில், தன்கர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு துணைக் குடியரசுத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை.
மேலும் அரசியலமைப்பு முகவுரையில் சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஆளுநர், ஜனாதிபதி அதிகாரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகவும் நேரடியாக விமர்சித்திருந்தார்.
இதுபோன்று சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பேசுபொருளாகி உள்ளது. கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.






