என் மலர்tooltip icon

    இந்தியா

    அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்
    X

    அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்

    • பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • பக்தர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.

    காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.

    குறிப்பாக ஜூலை முதல் ஆகஸ்டு மாதம் வரை பக்தர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான யாத்திரை நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி வரை யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த துயரமான பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதுடன், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

    குறிப்பாக பால்டால் பாதை வழியாக அமர்நாத் புனித யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பால்டால் மற்றும் பஞ்ச்தர்னியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் உள்ள டெலிமெடிசின் வசதிகளை தொலைதூர இடங்களுடன் இணைக்க இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடிப்படையிலான இணைப்பை பயன்படுத்தி, பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் உயரமான மலைகளில் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் உயரமான மலைகளில் உள்ள முகாம்களில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும். இதற்காக பெரிய ஆஸ்பத்திரிகளில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் நேரலையில் இணைக்கிறது. அவசர காலங்களில் விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சைகளை பெற முடியும்.

    ஹோலி கேவ், லோயர் ஹோலி கேவ், ஷேஷ்நாக் மற்றும் சந்தன்வாரி ஆகிய 4 கூடுதல் தளங்களுக்கு 'டெலிமெடிசின்' சேவைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.

    இந்த முயற்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் காஷ்மீர் சுகாதார சேவைகள் இயக்குநரகம் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் காஷ்மீர் சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் ஜெஹாங்கிர் பக்ஷி கூறினார்.

    Next Story
    ×