என் மலர்
இந்தியா

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: மத்திய பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
- கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
- குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவி பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்தார்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.






