என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு தினவிழா: தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு
    X

    கோப்புப்படம்

    குடியரசு தினவிழா: தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு

    • கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார்.
    • பிரான்ஸின் ராணுவ அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

    குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். மேலும், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.

    இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2020-ல் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019-ல் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013-ல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்திய பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.

    Next Story
    ×