என் மலர்
இந்தியா

எல்லை மீறிய பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் நுகர்வு.. அபாயத்தில் இந்தியா
- கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை செலவிடுகின்றனர்.
- இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன.
இந்தியர்கள் தங்கள் பட்ஜெட்டில் கணிசமான பகுதியை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடுகிறார்கள் என்று அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையது.
மத்திய அரசு வெளியிட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின்படி, கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை இதுபோன்ற பொருட்களை வாங்க செலவிடுகின்றனர்.
இதுவே நகர்ப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 11.09% தொகையை இதற்கு செலவிடுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளாக இந்த செலவினம் 10 சதவீதத்துக்கு கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வரம்பை கடந்துள்ளது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
2.61 லட்சம் வீடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, உணவு நுகர்வு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நகர்ப்புறங்களில், உணவு செலவினங்களில் 39% க்கும் அதிகமானவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வாங்குவதில் செலவிடப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் போன்ற அதிக சத்தானவற்றை தவிர்த்து மக்கள் ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவை நோக்கி அதிகம் செல்வது புலனாகிறது.
சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளை விளம்பரப்படுத்தும் சந்தைப்படுத்தலின் மூலம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் செலுத்தும் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.






