என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு துணை தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
    X

    குடியரசு துணை தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

    • நாளை மனுக்கல் பரிசீலனை செய்யப்படும்.
    • 25-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்.

    குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் 4 தொகுப்பு வேட்புமனு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்த பிறகு அதற்கான பதிவேட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார். அதன்பிறகு அதற்கான ஒப்புகை சீட்டை பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் பணியை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி நேற்று டெல்லி சென்றார். அவரை காங்கிரஸ் தலைவர்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் தலைவர் கார்கே எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அங்கு அவர் தனது வேட்பு மனுவை மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் வழங்கினார். அப்போது இந்தியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர்.

    சுதர்சன் ரெட்டியின் மனுவை இந்தியா கூட்டணி எம்.பி.களில் 20 பேர் முன்மொழிந்திருந்தனர். 20 எம்.பி.க்கள் வழி மொழிந்திருந்தனர்.

    குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவுபெறுகிறது. நாளை மனுக்கல் பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். அன்று மாலை போட்டி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும்.

    இதைதொடர்ந்து வருகிற 9-ந் தேதி பாராளுமன்ற அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். பாராளுமன்ற இருசபை எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள். அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெற்று குடியரசு துணை தலைவர் ஆவது ஏற்கனவே உறுதியாகி உள்ளது.



    Next Story
    ×