search icon
என் மலர்tooltip icon

  இந்தியா

  கனிமொழி, திருமாவளவன் உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் இன்று நேரில் கள ஆய்வு
  X

  கனிமொழி, திருமாவளவன் உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் இன்று நேரில் கள ஆய்வு

  • இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
  • இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன.

  புதுடெல்லி:

  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

  மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

  இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி சார்பாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

  இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் அறிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேரில் சென்று இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.

  மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர்ரஞ்சன், துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான இந்த குழுவில் கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான தி.மு.க. சார்பாக அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெற்று உள்ளார். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன், தி.மு.க. ரவிக்குமார், சுஷ்மிதா தேவ், சந்தோஷ் குமார், ஏ.ஆர். ரஹிம், மனோஜ் குமார் ஜா, ஜாவத் அலிகான், மஹுவா மாஜி, முஹம்மது பைசல், மொஹம்மது பஷீர், பிரேம சந்திரன், சுஷில் குப்தா, அரவிந்த் சாவந்த், ஜெயந்த் சிங் மற்றும் புலோ தேவி உள்ளிட்ட 21 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

  ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த இந்த 21 எம்.பிக்கள் இன்று மணிப்பூர் சென்றுள்ளனர்.

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

  இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த குழுவினர் இன்று இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுரா சந்த்பூருக்கு சென்றார்கள். இந்த குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசினர். குக்கி பழங்குடியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து வன்முறை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.

  பின்னர் இம்பாலுக்குத் திரும்பும் முன், மைதேயி சமூகத்தினரையும் சந்திப்பார்கள் என்று எதிர்க்கட்சி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிவாரண முகாம்களுக்குச் சென்று நிலைமையை பர்வையிட்ட இந்த குழு நாளை (ஞயிற்றுக் கிழமை) காலை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவையும் சந்திக்க உள்ளது.

  குழுவில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில் "மணிப்பூரில் உண்மை நிலவரத்தை கண்டுபிடித்து, அந்த உண்மையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது என்றார். ஆதிர்ரஞ்சன் எம்.பி. கூறுகையில், மணிப்பூர் நிலவரம் குறித்து அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து எங்கள் பரிந்துரைகளை அரசுக்கு முன்வைப்போம் என்றார்.

  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.

  Next Story
  ×