என் மலர்
இந்தியா

இனியும் என்னால் வாழ முடியாது.. தயவு செய்து விஷம் கொடுத்து விடுங்கள் - நீதிபதியிடம் கெஞ்சிய நடிகர் தர்ஷன்
- நடிகர் தர்ஷன் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
- ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.
தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இனிமேல் வாழ முடியாது என்றும், தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறும் நீதிபதியிடம் தர்ஷன் கெஞ்சியுள்ளார்.
நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின்போது, சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதியிடம் பேசிய தர்ஷன், "நான் பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எங்கும் பூஞ்சைகள் சூழ்ந்து பயமுறுத்துகிறது. நான் அணிந்திருக்கும் ஆடைகள் கூட துர்நாற்றம் வீசுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் வாழ முடியாது. குறைந்தபட்சம் எனக்கு விஷமாவது கொடுங்கள். இங்கு வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது" என்று தெரிவித்தார்.
ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.






