என் மலர்
இந்தியா

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் மீட்பு
- கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது
- சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
டேராடூன்:
உத்தரகாண்ட மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.
உத்தரகாண்டில் பருவ நிலை சரியில்லாத நேரங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பக்தர்கள் பலியானர்கள்.
கடந்த 7-ந் தேதி கடுமையான பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த ஹெலிகாப்டர் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதால் 5 பக்தர்கள் உயிர் தப்பினார்கள்.
இந்த நிலையில் உத்தரகாண்டில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குப்தகாசிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் இருந்தனர்.
கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் விமானி திணறினார்.
சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலியானார்கள்.
சம்பவ இடத்துக்கு உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சென்று உடல்களை மீட்டனர்.






