search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தொடரும் மழை- போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு
    X

    கேரளாவில் தொடரும் மழை- போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு

    • மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு மாநிலத்தில் ஆயிரத்து 100 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. தாமதமாக தொடங்கினாலும் நாளுக்கு நாள் மழையின் தீவிரம் அதிகமாகவே உள்ளது.

    மழையோடு காற்றும் பலமாக வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இந்த மரங்கள் மின்வயர்களில் விழுந்ததால் மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன. இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோழிக்கோடு, கண்ணூர், தலச்சேரி பகுதிளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை மரங்கள் சாய்ந்தன. அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

    மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று அதிகாலையிலும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் இடுக்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களிலும் நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு மாநிலத்தில் ஆயிரத்து 100 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன. மழையின் காரணமாக மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 227 நிவாரண முகாம்களில் சுமார் 10 ஆயிரத்து 399 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தயார் நிலையில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மூணாறு-போடிமெட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து பெய்த மழை மற்றும் இரவு நேரத்தை கருத்தில் கொண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×