என் மலர்
இந்தியா

5-வது நாளாக பலத்த மழை: மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
- மும்பையை அச்சுறுத்தும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
- தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மும்பையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் மும்பையில் புறநகர் பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மிக கன மழை பெய்தது.
இந்த 2 நாட்களில் மட்டும் 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் மும்பையில் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.
இந்த நிலையில் இன்று 5-வது நாளாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையை அச்சுறுத்தும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மும்பையில் மட்டுமின்றி தானே, புனே, ராய்கட், கோல்காபூர், ரத்தினபுரி உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மும்பையில் இருந்து பெரும்பாலான மாவட்டங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. அதுபோல வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மும்பைக்கு வரும் போக்குவரத்து முடங்கி உள்ளது.
மும்பையில் நீடிக்கும் மழை காரணமாக இன்று ரெயில், பஸ், விமான போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. 90 சதவீத மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் மழை காரணமாக இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் கூடுதலாக மும்பைக்கு விரைந்து உள்ளனர்.
மும்பையில் பக்திமார்க்-செம்பூர் இடையே மோனோ ரெயிலில் சிக்கி தவித்த 800 பயணிகள் மீட்கப்பட்டனர். அதுபோல தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் மழை காரணமாக 12 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.






