என் மலர்
இந்தியா

உ.பி.யில் முன்னாள் விமானப்படை வீரர் சுட்டுக்கொலை!
- மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறோம்
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில், முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் (58) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் (IAF) இருந்து ஓய்வு பெற்ற யோகேஷ், தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அசோக் விஹார் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று உள்ளூர் சந்தையில் இருந்து யோகேஷ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் உடல் ரீதியாக தாக்கி, அவரது தலையில் சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், யோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார் என உ.பி. போலீசார் தெரிவித்தனர்.
"திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறோம். மேலும் விசாரணைக்காக அருகிலுள்ள கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளோம்," என ஏசிபி லோனி சித்தார்த்த கௌதம் தெரிவித்துள்ளார்.






