என் மலர்
இந்தியா

சத்தீஸ்கரில் என்கவுண்டர்: 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
- கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை.
- நேற்றிரவு மற்றும் இன்று காலை நடைபெற்ற சண்டையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.
பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடைபெற்ற நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திப்பட்டனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற சண்டைக்குப்பிறகு 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force), மாவட்ட ரிசர்வ் கார்டு (District Reserve Guard), மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) சிறப்புக் குழுவான CoBRA ஆகியவை இணைந்து கடந்த 4ஆம் தேதி ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று பாஸ்கர் சுட்டு வீழ்த்தப்பட்டார். நேற்று முன்தினம் சுதாகர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவர்களது தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்ற 5 பேர்களில் இருவர் பெண்கள் ஆவார்கள். இந்த சண்டையின்போது பாம்பு, தேனீக்கள் காரணமாக சில வீரர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






