search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆச்சரியம் அளிக்கும் மோகன் யாதவ் தேர்வு: வேறு கணக்கு போடும் பாஜக
    X

    ஆச்சரியம் அளிக்கும் மோகன் யாதவ் தேர்வு: வேறு கணக்கு போடும் பாஜக

    • அறிவிப்பு வெளியானதும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.
    • தேசிய அளவிலும் கூட பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் என்ற எம்.எல்.ஏ. தேர்வானார். முதல்-மந்திரியாக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானதும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். ஒருவர் கூட இதை எதிர்பார்க்கவில்லை. தேசிய அளவிலும் கூட பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    ஏனெனில் மத்திய பிரதேச முதல்- மந்திரி பதவிக்கான போட்டியில் மோகன் யாதவ் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. முன்னாள் முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்பட 3 பேர் பெயர்தான் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் மிக மிக சாதாரண நிலையில் இருந்த ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு பா.ஜ.க. மேலிடம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 48 சதவீதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு பா.ஜனதா முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாக கருதப்படுகிறது.

    சிவராஜ்சிங் சவுகானின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை மந்திரியாக மோகன் யாதவ் இருந்து வந்துள்ளார். உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் இருந்து 2013, 2018, 2023-ம் ஆண்டுகளில் அவர் 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.

    உஜ்ஜைன் நகரில் 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பிறந்த இவர் சட்டம் படித்துள்ளார். முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இளம் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1991-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். மாணவர் இயக்கத்தின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.

    1993-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை தீவிர அரசியலுக்கு கொண்டு வந்தவர் உமா பாரதி ஆவார். அவர்தான் மோகன் யாதவுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கினார்.

    இதன் காரணமாகவே அவர் 2013 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். ஊழல் செய்யாத அரசியல்வாதி என்று புகழ் பெற்றுள்ள இவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இத்தனைக்கும் இவரது தந்தை சாதாரண டீ விற்கும் பணியைத்தான் செய்து வந்தார். கட்டுக்கோப்பான வாழ்க்கை காரணமாக இவரது திட்டமிட்ட பணிகள் பா.ஜ.க. மேலிடத்துக்கு தெரிய வந்திருந்தது.

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வந்த அவருக்கு பல்வேறு காரணங்களால் பா.ஜனதா முதல்-மந்திரி பதவியை கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. முதல்-மந்திரி தேர்வு நடந்து கொண்டிருந்தபோது மோகன் யாதவ் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்த வரிசையில் கடைசி இருக்கையில் நெருக்கி அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

    மேடையில் இருந்த தலைவர்கள் மோகன் யாதவ் பெயரை அறிவித்தபோது யாராலும் நம்ப முடியவில்லை. மோகன் யாதவும் ஆச்சரியத்தில் மற்றவர்களை பார்த்தார். அவரிடம் மகிழ்ச்சிக்கு பதில் அதிர்ச்சிதான் அதிகமாக காணப்பட்டது.

    ஒரு நிமிடம் அவர் தனது இருக்கையிலேயே அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தார். அப்போது மேடையில் இருந்த சிவராஜ்சிங் சவுகான் சத்தமாக, 'மோகன்ஜி எழுந்து வாருங்கள்' என்று அழைத்தார்.

    அதன் பிறகு மோகன் யாதவ் இயல்பு நிலைக்கு திரும்பி மேடைக்கு சென்றார். அவருக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர். சிறிது நேரம் கழித்துதான் மோகன் யாதவ் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    மத்திய பிரதேச முதல்-மந்திரி யார்? என்பது கடைசி நிமிடம் வரை பரபரப்பாகவும், சஸ்பென்சாகவும் இருந்தது. மோகன் யாதவ் பெயர் அறிவிக்கப்பட்டபோது இந்த சஸ்பென்ஸ் உச்சகட்டத்தை எட்டியது.

    மோகன் யாதவை முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்திருப்பதன் மூலம் பா.ஜனதா புதிய வியூகம் ஒன்றை வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், பீகாரில் யாதவ இன மக்கள் கணிசமாக உள்ளனர். அடுத்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கும்போது இந்த இரு மாநில யாதவர்களின் வாக்குகளை அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரிடம் இருந்து தட்டி பறிக்கவே பா.ஜ.க. மோகன் யாதவை முன்னிலைப் படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய முதல்-மந்திரியாகி இருக்கும் மோகன் யாதவ் சிறந்த சிவ பக்தர். அவர் தனது சொந்த ஊரான உஜ்ஜைனிக்கு வரும் போதெல்லாம் சிவ ஆலயத்துக்கு சென்று வழிபட தவறுவதில்லை. அந்த சிவன்தான் தனது கணவருக்கு உயர்ந்த பதவியை வழங்கிக் கொண்டிருப்பதாக அவரது மனைவி சீமா யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    58 வயதாகும் மோகன் யாதவ் சிறந்த மல்யுத்த வீரர் ஆவார். அவரை மல்யுத்த பயில்வான் என்றே அழைப்பார்கள். முதல்-மந்திரியாக தேர்வானதும் அவர் மல்யுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    Next Story
    ×