search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருள்களுக்கு தடை
    X

    அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருள்களுக்கு தடை

    • அமர்நாத் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள்.
    • இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை அடுத்த மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும்போது தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் மற்றும் துரித உணவுப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    யாத்ரீகர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்களையும், சில அரிசி உணவுகளையும் எடுத்துச்செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும் யாத்ரீகர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 5 கிலோமீட்டர் நடைபயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரிய குழு வெளியிட்ட சுகாதார ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×