என் மலர்
இந்தியா

இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ரெயில் நிலையம் பற்றி தெரியுமா?.. காரணம் இதுதான்
- 2008 இல் தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையம் ஒன்றே பெயரில்லாமல் இயங்கி வருகிறது.
- இந்த நிலையத்தில் வந்திறங்கும் புதிய பயணிகள் குழப்பத்திற்கு ஆளாவார்கள்.
இந்தியாவில் பெயரே இல்லாமல் ஒரு ரெயில் நிலையம் இயங்கி வருகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம்.. மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது. இந்தியாவில் 7112 ரெயில் நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில் 2008 இல் தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையம் ஒன்றே பெயரில்லாமல் செயல்பாட்டில் உள்ளது.
பர்தமான் மாவட்டத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா-மாசகிராம் ரயில் பாதையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. முதலில் இந்த ரெயில் நிலையத்துக்கு அதிகாரப்பூர்வமாக ராய்நகர் என்ற பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் ரெய்னா கிராமத்தினர் தங்கள் ஊரின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளனர். இரு கிராமங்களுக்கு இடையே நிலையம் அமைத்துள்ளதால் இரு கிராமத்தினரும் தங்கள் ஊரின் பெயரையே ரெயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று சண்டையிட்டுள்ளனர். இரண்டு கிராமங்களும் இது தொடர்பாக நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. வழக்கமாக மஞ்சள் பலகையில் ரெயில்நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள மஞ்சள் பலகை காலியாக விடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் தினமும் ஒரே ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தினமும் 6 முறை இந்த பெயரில்லாத நிலையத்தை அந்த ரெயில் கடந்து செல்கிறது. இந்த நிலையத்தில் வந்திறங்கும் புதிய பயணிகள் குழப்பத்திற்கு ஆளாவார்கள். கிராமவாசிகளிடம் விசாரித்த பிறகே சரியான இடத்தை தெரிந்துகொள்வார்கள்.
இது தொடர்பாக அந்நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் நபகுமார் நந்தி கூறுகையில், ரெயில்வே சார்பில் ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து கிராமத்தினர் நீதிமன்றம்சென்றனர். இப்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.






