என் மலர்
இந்தியா

"நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டெல்லி அரசு எடுத்த முடிவால் 62 லட்சம் வாகனங்கள் மாயமாகும்"- அதிஷி
- போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
- இரு சக்கர வாகனங்களை பெரிதும் நம்பியுள்ள தொழிலாள வர்க்கத்தை கடுமையாக பாதிக்கும்.
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்டோமொபைல் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நன்கொடையாக எத்தனை லட்சம் ரூபாய் பெற்றார்கள் என்பதை வெளிப்படுத்துமாறு பாஜகவை டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுள்ளார். பணம் வாங்கியதே வாகனத் தடைக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்று அதிஷி குற்றம் சாட்டினார்.
பாஜகவின் துக்ளக் சீர்திருத்தங்கள் மூலம் ஒரே இரவில் 62 லட்சம் வாகனங்கள் சாலைகளில் இருந்து மறைந்துவிடும் என்றும் அதிஷி கூறினார். இவற்றில் 40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 20 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகும்.
தற்போதைய தடை, இரு சக்கர வாகனங்களை பெரிதும் நம்பியுள்ள தொழிலாள வர்க்கத்தை கடுமையாக பாதிக்கும். இந்த 40 லட்சம் பேர் எப்படி வேலைக்குச் செல்வார்கள்? அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று அதிஷி வினவியுள்ளார்.
"ஒரு வாகனத்தின் வயதுக்கும் மாசுபாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்கு பராமரிக்கப்படும் வாகனங்கள் பழையதாக இருந்தாலும் மாசுபாட்டை ஏற்படுத்தாது. ஒரு வாகனம் பழையது என்பதற்காக அது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல.
சில கார்கள் 7 ஆண்டுகளில் 3 லட்சம் கி.மீ. பயணிக்க முடியும். 15 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், அது 50,000 கி.மீ. மட்டுமே பயணித்திருக்கலாம். இது கொடூரமானது இல்லையா?" என்று அதிஷி கேட்டுள்ளார்.
பாஜக தலைவர்களால் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை சிறு குழந்தைகள் கூட 5 மாதங்களுக்குள் புரிந்துகொள்வார்கள் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.






