என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்: டெல்லி அரசு ஏற்பாடு
    X

    அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்: டெல்லி அரசு ஏற்பாடு

    • டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் விலங்குகள் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.
    • ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து டெல்லியில் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் என்று மேம்பாட்டு அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற விலங்குகள் நல வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    வரும் செப்டம்பர் 28-ந்தேதி உலக ரேபிஸ் தினத்திற்கு முன்பு, நாய் கடி சம்பவங்களைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்ட விலங்குகள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பதும் இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும், மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்தது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×