search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரசில் அஜய்ராய் போட்டி
    X

    பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரசில் அஜய்ராய் போட்டி

    • கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டார்.
    • மோடிக்கு எதிராக 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கும் அஜய்ராய் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்தவர்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 3-வது முறையாக அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ள அவர் இந்த தடவை சரித்திர சாதனையுடன் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

    2014-ம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முதலாக அந்த தொகுதியில் போட்டியிட்டபோது மொத்தம் பதிவான வாக்குகளில் 56 சதவீத வாக்குகளை பெற்றார். 2019-ம் ஆண்டு 2-வது முறையாக போட்டியிட்டபோது 63 சதவீத வாக்குகளை பெற்றார்.

    இந்த தடவை 75 முதல் 80 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக அவர் தனி குழு ஒன்றை வாரணாசி தொகுதியில் களம் இறக்கி ஆதரவு திரட்டி வருகிறார்.

    பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்று 17 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் மேலிடம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது.

    இவர் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவார். கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் இவர்தான் மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டார். தற்போது 3-வது முறையாக மீண்டும் அஜராய் மோடிக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்.

    வாரணாசி தொகுதி 1991-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பிரதமர் மோடி அந்த தொகுதிக்கு சென்றபிறகு பா.ஜ.க.வுக்கு ஆதரவு பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி உறுதி என்பது அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு 2-வது இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலின்போது மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் சுமார் 3.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பெற்றார்.

    காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் சுமார் 75 ஆயிரம் வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஸ்டாலின்யாதவ் 18 சதவீத வாக்குகளுடன் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக வந்து 2-வது இடத்தை பிடித்தார். அப்போதும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 14 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி சார்பில் அஜய்ராய் களம் இறங்கி இருப்பதால் அவருக்கு 2-வது இடம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் அஜய்ராயால் எவ்வளவு வாக்குகள் வாங்க முடியும் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கும் அஜய்ராய் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்தவர். பிறகு பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்து அரசியலில் ஈடுபட்டார். 1996-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 3 தடவை அவர் உத்தரபிரதேச சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார்.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜ.க. மேலிடம் கொடுக்கவில்லை. இதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து மூத்த தலைவர்களில் ஒருவராக மாறினார்.

    நாளடைவில் அந்த கட்சியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக தேர்வானார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அவர் 3-வது முறையாக மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    Next Story
    ×