என் மலர்
இந்தியா

கோப்புப்படம்
2 வாரங்களில் ரூ. 10 கோடி.. நன்கொடையாளர்களுக்கு கோடான கோடி நன்றி.. காங்கிரஸ்
- அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நிதி சேகரிக்கும் திட்டம்.
காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்ற பெயரில் மக்களிடம் டிஜிட்டல் முறையில் நிதி சேகரிக்கும் திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது. மக்களிடம் நிதி சேகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், நிதி சேகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் ரூ. 10 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. விரைவில் துவங்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நிதி சேகரிக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோப்புப்படம்
"புத்தாண்டு, புதிய மைல்கற்கள் - இரண்டே வாரங்களில் ரூ. 10 கோடியை கடந்துவிட்டோம். 2024 துவங்கி இருப்பதை அடுத்து, இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு சாதனைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 138 ஆண்டுகால சேவையை கொண்டாடுகிறோம், நாங்கள் தேசத்திற்கு சேவையாற்ற துவங்கி 138 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது."
"ஆன்லைன் நிதி சேகரிப்பில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம்- எங்களின் ஆன்லைன் நிதி சேகரிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இதுவரை நாங்கள் ரூ. 10 கோடியை நன்கொடையாக பெற்று இருக்கிறது."
"இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் பெருந்தன்மை அபாரமாக இருந்தது. இரண்டே வாரங்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 929 பரிமாற்ற கோரிக்கைகள். உங்களின் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு மூலக்காரணம்," என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார்.






