என் மலர்
இந்தியா

மரண படுகுழிகளாக மாறியுள்ள பயிற்சி மையங்கள்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
- ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது.
- இதில் சிக்கி 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் ராஜேந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, பயிற்சி மைய உரிமையாளர் உள்பட சிலரை போலீசார் கைதுசெய்தனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், உரிய விதிகளைப் பின்பற்றாத பயிற்சி மையங்களை மூடும்படி உத்தரவிட்டது.
அதன்பின் முறையாக விதிகளைப் பின்பற்றாத் பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து பயிற்சி மையங்கள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டடது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு கூறியதாவது:
பயிற்சி மையங்களை அதிகாரிகள் முறைப்படுத்தவில்லை. டெல்லியில் மட்டும் நூற்றுக்கணக்கான மையங்கள் செயல்படும் நிலையில் அதற்கென விதிகள் ஏதும் வகுக்கப்பட்டு உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
பயிற்சி மையங்கள் மரண சேம்பர்களாக மாறிவிட்டன. விதிகளைப் பின்பற்றாதவரை வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்தலாம். இந்த மையங்கள் மாணவர்களின் விருப்பங்களோடு விளையாடுகின்றன.
முறையான காற்றோட்டம், பாதுகாப்பான நுழைவு மற்றும் வெளியேறும் வழி அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.






