என் மலர்
இந்தியா

திருப்பதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு: முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை ஆலோசனை
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து கருத்துக்களை கேட்கிறார்.
- நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் நீண்ட நேரம் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். கோடை காலம் என்பதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
காலை 8 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடங்குகிறது. அதன் பிறகு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்ற பக்தர்கள், பரிந்துரை கடிதம் கொண்டுவரும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக மதியம் 1.30 மணி வரை சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களும் ஒரே நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாலும் காலதாமதம் ஏற்படுகிறது.
சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலை 9.30 மணிக்கு தரிசனம் செய்யலாம் என நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் வரிசையில் வந்து 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதனால் மற்ற கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
வி.ஐ.பி பிரேக் தரிசனம் அதிகாலையில் தொடங்க வேண்டும். கோடை காலம் முடியும் வரை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தேவஸ்தான அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். அதில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வது, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து கருத்துக்களை கேட்கிறார்.
மற்ற மாநிலங்களில் உள்ள தலைநகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டுவது குறித்தும் வெளிநாடுகளில் இந்துக்கள் அதிக அளவில் உள்ள நகரங்களில் கோவில் கட்டுவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 73,007 பேர் தரிசனம் செய்தனர். 24,440 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






