என் மலர்
இந்தியா

தண்ணீர் வெடிகுண்டு: சீனா கட்டப்போகும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த அருணாசல பிரதேச முதல் மந்திரி
- பிரம்மபுத்திரா நதி குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு சீனா கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
- இந்த அணையைக் கொண்டு 60,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தி செய்யலாம் என்பது திட்டம்.
இடா நகர்:
திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அணையைக் கொண்டு 60,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தியைச் செய்யலாம் என்பது திட்டம். புதிய அணை கட்டுவதன் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்கின்றனர்.
இந்நிலையில், சீனா கட்டும் அணை இந்தியாவுக்கு தண்ணீர் வெடிகுண்டு போன்றது என அருணாசல பிரதேச முதல் மந்திரி பெமா காண்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சீனாவை நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என யாருக்கும் தெரியாது.
சீனா கட்டும் அணையால் நமது பழங்குடியினர் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமானது.
இந்த அணையை தண்ணீர் வெடிகுண்டாக சீனா பயன்படுத்தலாம். இந்த அணை கட்டுமான பணியை சீனா தொடங்கியிருக்கலாம். அல்லது விரைவில் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இது தொடர்பான எந்த தகவலையும் பகிர மாட்டார்கள்.
அணை கட்டும் பணிகள் முடிந்தால் நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும் என தெரிவித்தார்.
பிரம்மபுத்திரா நதி இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது. உலகின் மிக நீண்ட நதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.






