என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவிலேயே பணக்கார முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவிலேயே பணக்கார முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    • இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
    • பால் உற்பத்தி நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபுநாயுடுவின் குடும்பத்தினரிடம் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் மம்தா பானர்ஜிக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது.

    ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆண்டுதோறும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டில் இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அந்த பட்டியலின்படி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, ரூ.931 கோடி சொத்து மதிப்புகளுடன் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தொடங்கிய பால் உற்பத்தி நிறுவனமாகும்.

    கடந்த 1992-ம் ஆண்டு ரூ.1 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடனும் ரூ.7 ஆயிரம் செலுத்தப்பட்ட மூலதனத்துடனும் அவர் தொடங்கிய அந்த நிறுவனம் தற்போது பல இடங்களில் கிளைகளை பரப்பி, விரிவடைந்து ரூ.931 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது.

    இந்த நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபுநாயுடுவின் குடும்பத்தினரிடம் உள்ளது. இதில் சந்திரபாபுநாயுடு பெயரில் எந்த சொத்தும் இல்லை என்றாலும் அவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகள் உள்ளன. அந்த பங்குகள் சந்திரபாபுநாயுடுக்கு சொந்தமானதாகவே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் நாரா (சந்திரபாபுநாயுடு குடும்ப பெயர்) குடும்பத்தினர் மொத்தம் 41.3 சதவீதத்தை வைத்துள்ளனர். இதன் மதிப்பு 1995-ம் ஆண்டு ரூ.25 கோடியாக இருந்தது. அதன் சந்தை மூலதனம் ரூ.4,381 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. அதிகபட்சமாக 1,81,907 பங்குதாரர்களை கொண்டுள்ளது.

    ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள பட்டியலில் கடைசி வரிசையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளார். அவர்தான் மிகவும் வசதி குறைந்தவராக உள்ளார்.

    இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தேர்தலின்போது பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்ததின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×