என் மலர்
இந்தியா

பட்ஜெட் 2025- 26: புதிய வருமான வரிச்சட்டம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்- நிர்மலா சீதாராமன்
- வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது.
- வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக உயரத்தப்ட்டுள்ளது.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. வருமான வரிவிதிப்பு எளிமைப்படுத்தப்படும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக உயரத்தப்ட்டுள்ளது. வருமான வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டுவரப்படும். அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்" என்று அறிவித்தார்.
இந்தியாவில் தற்போது வருமான வரியில் பழைய முறை மற்றும் புதிய முறையை என்ற 2 முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வருமான வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
புதிய வரி முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ஆனால் ரூ.3-7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். அதேசமயம், பிரிவு 87A இன் கீழ் ரூ. 7 லட்சம் வரை வரி தள்ளுபடி பெறலாம்.
அதே சமயம் ரூ.7-10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.10-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.12-15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.15 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படுகிறது.
அதே சமயம் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. அதேசமயம் ரூ.2.5-5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும் ரூ.5-10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.10 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால் பழைய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.






