search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உறவுகளுடன் உரையாட உதவிக்கரம் நீட்டும் பொதுத்துறை
    X

    உறவுகளுடன் உரையாட உதவிக்கரம் நீட்டும் பொதுத்துறை

    • இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
    • இரு தரப்பினருக்கும் தைரியம் வரவழைக்கும் முயற்சி என மேலாளர் கூறினார்

    மலைமாநிலம் எனப்படும் வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் மழை, வெயில், பனி என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் மலைச்சரிவுகளால் பயணம் தடைபடாத வகையில் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன.

    அந்த சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திர கோளாறினால் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) ஒரு குழாய் வழியாக அந்த சுரங்கத்திற்குள் ஒரு தரைவழி தொலைபேசி சாதனத்தை (landline instrument) அனுப்ப தயார் நிலையில் உள்ளது. அதற்கு வேண்டிய தொலைத்தொடர்பு லைன்களை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "இந்த சாதனத்தின் மூலம் சிக்கி கொண்டுள்ள பணியாளர்கள், வெளியே கவலையுடன் உள்ள அவர்களின் குடும்பத்தினருடன் பேசி கொள்ள முடியும். இது இரு தரப்பினருக்கும் ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கும்" என அம்மாவட்ட பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் (DGM) ராகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

    பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த மீட்பு நடவடிக்கையை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி துரிதப்படுத்தியுள்ளார்.

    Next Story
    ×