என் மலர்
இந்தியா

இந்திய பாராளுமன்றத்தில் இல்லை..! ஆனால் வெளிநாடு அரசுகளுக்கு விளக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது- டி.ராஜா
- பாராளுமன்றம் மற்றும் மக்களிடம் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கவில்லை.
- வெளிநாடுகளுக்கு குழுவை அனுப்பும் விசயத்தில் அரசியல் கட்சிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை அல்லது விளக்கப்படவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு ஆதரவு வழங்கப்படும் என இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8 முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. 10ஆம் தேதி மதியம் இருதரப்பிலும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதற்கிடையே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அனைத்துவகையான பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் உறுதியான அணுகுமுறை, தேசிய கருத்தொற்றுமை ஆகியவற்றை அனைத்துக்கட்சி குழுக்கள் விளக்கிச் சொல்லும். பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக்கொள்வது இல்லை என்ற இந்தியாவின் வலிமையான செய்தியை அவர்கள் உலகத்துக்கு முன்னெடுத்துச் செல்வார்கள்.
இந்த நிலையில் பாராளுமன்றம் மற்றும் மக்களிடம் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்காமல், வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கம் அளிக்க இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிபிஐ தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை அல்லது விளக்கப்படவில்லை என்றும், பிரதிநிதிகளின் பணி குறித்து தெளிவு இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.