என் மலர்
இந்தியா

சுயமரியாதையால் கவனம் ஈர்த்த சிறுவன்- வீடியோ
- அந்த நபர் 500 ரூபாயை கொடுத்து சிறுவனிடம் இருந்து அப்பளங்களை கேட்டார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
ஏழ்மையின் காரணமாக சிறுவர்கள் பஜார்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சிறு, சிறு வியாபாரம் செய்வதை பார்த்திருப்போம். அவ்வாறு கடற்கரையில் அப்பளம் விற்கும் ஒரு சிறுவன் தனது சுயமரியாதையை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், கடற்கரை ஒன்றில் அப்பளம் விற்கும் சிறுவனுடன் ஒருவர் உரையாடுவது போன்று காட்சிகள் உள்ளது. அப்போது தன்னிடம் பேசும் நபரிடம் சிறுவன், என்னால் இதுவரை அப்பளத்தை விற்க முடியவில்லை என்று கூறினான். உடனே அந்த நபர் சிறுவனிடம் இருந்து அப்பளத்தை வாங்குவதற்காக விலையை கேட்டார். அதற்கு சிறுவன், ஒரு பாக்கெட் ரூ.30 என கூறினான். அதற்கு அந்த நபர் அதை ரூ.5-க்கு தருமாறு கேட்கிறார். இதனால் சிறுவன் தயங்கிய போதும் சிறிது நேரம் கழித்து ஒப்புக்கொண்டான்.
பின்னர் அந்த நபர் 500 ரூபாயை கொடுத்து சிறுவனிடம் இருந்து அப்பளங்களை கேட்டார். இதனால் சிறுவன் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினாலும், தனது சுயமரியாதையை வெளிப்படுத்தினான். அதாவது அவர் கொடுத்த அதிகப்படியான பணத்தை ஏற்க மறுத்த சிறுவன், நான் வேலை செய்கிறேன். ஆனால் பிச்சை எடுப்பதில்லை என்றான். சிறுவனின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அந்த நபர், சிறுவனிடம் உனது குடும்ப செலவுக்காக இதனை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அவரது வற்புறுத்தலுக்கு பிறகு சிறுவன் பணத்தை ஏற்றுக்கொள்வது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.






