என் மலர்
இந்தியா

தலைநகரில் பதற்றம்: டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குண்டுவெடிப்பு
- செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
- மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன என்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
முன்னதாக இன்று, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அதீல் அகமது ராதர் என்ற டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டாக்டர் அதீல் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் வெடிமருந்துகளை அரியானா மாநிலம் பரீதாபாத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவர் சொன்ன இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 300 கிலோ ஆர்.டி.எஸ். வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான டாக்டர் அதீல் அகமது தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியை சேர்ந்த முசாமில் ஷகீல் என்ற மற்றொரு டாக்டருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் வாடகைக்கு இருந்த வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாக்டர்கள் அதீல் அகமது, முகாமில் ஷகீல் ஆகிய 2 பேரையுமே போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






