search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிபுரா இடைத்தேர்தல்: இரண்டு தொகுதிகளையும் தன்வசமாக்கியது பா.ஜனதா
    X

    திரிபுரா இடைத்தேர்தல்: இரண்டு தொகுதிகளையும் தன்வசமாக்கியது பா.ஜனதா

    • வாக்குப் பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமிருந்த தொகுதியை கைப்பற்றியது பா.ஜனதா

    திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தன்புர் தொகுதி பா.ஜனதா வசம்தான் இருந்தது. பிரதிமா பௌமிக் மத்திய மந்திரியானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிந்து டெப்நாத் போட்டியிட்டார். அவர் 30,017 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுசிக் சண்டா 11,146 வாக்குள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பழங்குடியின வகுப்பினரை சேர்ந்த 18,871 வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

    போக்சாநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாம்சுல் ஹக் காலமானதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் 30,237 வாக்குகள் (சுமார் 66 சதவீதம்) சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களுடையது. இதனால், இந்த வாக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா வேட்பாளர் டஃபாஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மிஜன் ஹொசைன் 3,909 வாக்குகள் பெற்றார்.

    ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தன்புர் தொகுதியில் முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது.

    தேர்தலின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×